சென்னை
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்... சூடான் நாட்டில் இருந்து இதுவரை 96 பேர் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
|சூடான் நாட்டில் இருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை 'ஆபரேஷன் காவிரி' திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையம் வந்தவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:- 'சூடான் நாட்டில் இருந்து இதுவரை தமிழகத்தை சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்குள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை மீட்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்' என தெரிவித்தார்.
பின்னர் மீட்கப்பட்டவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் தேநீர் வாங்கி தந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் மீட்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.