வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதே நோக்கம் - சரத்குமார்
|தென் மாவட்டங்களில் நடந்து வரும் கொலைகளுக்கு தொழில் வளம் குறைவாக உள்ளதே காரணம். எனவே, அதிக தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
நெல்லையில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சரத்குமார் கூறியதாவது:-
சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வருங்காலங்களில் இது போன்று மழை பெய்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மக்கள் தங்கள் எதிர்ப்பை அரசு மீது காட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தேர்தல் நேரத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டுவதற்கு மறந்து விடுகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்த அளவில் சட்டம்-ஒழுங்கு குறை சொல்லும் அளவுக்கு இல்லை. தென் மாவட்டங்களில் நடந்து வரும் கொலைகளுக்கு தொழில் வளம் குறைவாக உள்ளதே காரணம். எனவே, அதிக தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் அதிக தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதே எங்கள் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.