சேலம்
காட்டுக்கோட்டையில் பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
|காட்டுக்கோட்டையில் பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தலைவாசல்:
சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் காட்டுக்கோட்டை உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. புறவழிச்சாலையில் எந்த பஸ்களும் நின்று செல்வது இல்லை. எனவே காட்டுக்கோட்டையில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி நேற்று பொதுமக்கள் புறவழிச்சாலை நுழைவு வாயிலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்கள் நின்று செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந்த உண்ணாவிரதத்தில் ஐக்கிய விவசாய சங்க மாவட்ட தலைவர் சரவணன், காட்டுக் கோட்டை அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியம்மாள் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.