< Back
மாநில செய்திகள்
பாலங்களில் வளர்ந்த மரம், செடிகள் அப்புறப்படுத்தப்படுமா?- பொதுமக்கள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பாலங்களில் வளர்ந்த மரம், செடிகள் அப்புறப்படுத்தப்படுமா?- பொதுமக்கள்

தினத்தந்தி
|
28 Nov 2022 8:23 PM GMT

கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாவதால் பாலங்களில் வளர்ந்துள்ள மரம், செடிகள் அப்புறப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாவதால் பாலங்களில் வளர்ந்துள்ள மரம், செடிகள் அப்புறப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்லணைக்கால்வாய்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. ஆறுகள் பொதுவாக இயற்கையாகவே தோன்றி பள்ளத்தை நோக்கி செல்லும். ஆனால் கல்லணையில் தொடங்கி தஞ்சை மாநகரம் வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் என்கிற புதுஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து சென்று கடைமடை வரை செல்கிறது. இது விவசாயத்திற்காக மனிதர்களால் வெட்டப்பட்டது.

பல்வேறு பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கல்லணைக்கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கும் வகையில் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் 337 கிளை வாய்க்கால்களை கொண்டுள்ளது.

பழுதடைந்த பாலம்

இந்த கல்லணைக்கால்வாயின் குறுக்கே பாலங்கள், மதகுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தஞ்சை பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், பஸ்கள், கார்கள், வேன்கள் சென்று வருகின்றன. விடுமுறை நாட்களில் வெளியூரில் இருந்து பெரியகோவிலுக்கு ஏராளமானோர் வாகனங்களில் வரும்போது, இந்த பாலத்தின் வழியாக வழக்கத்தைவிட கூடுதல் வாகனங்கள் சென்று வரும்.

இந்த பாலம் பழுதடைந்தநிலையில் உள்ளதால் இதற்கு மாற்றாக அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. பெரியகோவில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த புதிய பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. பழைய மற்றும் புதிய பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் மரம், செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. ஏற்கனவே பழைய பாலத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள சுவர்களில் விரிசல் விழுந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டன.

ரெயில்வே மேம்பாலம்

மரம், செடிகள் வளர்ந்து வருவதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த பாலங்களில் வளர்ந்து வரும் மரம், செடிகளை அப்புறப்படுத்துவதுடன் பழைய பாலம் எப்படி இருக்கிறது என அதன் கட்டிட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தஞ்சை பெரியகோவில் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக மருத்துவக்கல்லூரி, வல்லம், புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இந்த பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றன.

அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் தினமும் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இப்படி மாநகரின் மையப்பகுதியில் முக்கிய பாலமாக இந்த பாலம் திகழ்கிறது. தற்போது இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த செடிகளை அப்புறப்படுத்தாவிட்டால் பாலத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்