கரூர்
சரஸ்வதி பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
|சரஸ்வதி பூஜையை பொதுமக்கள் கொண்டாடினர்
குளித்தலை நகர மற்றும் குளித்தலையை சுற்றிய கிராம பகுதிகளில் சரஸ்வதி பூஜை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து பூ மற்றும் மாலை அணிவித்தனர். பின்னர் சாமிக்கு வாழை இலையில் பொரி, அவல், நாட்டு சர்க்கரை, கடலை, பழ வகைகள், வேகவைத்த சுண்டல் போன்ற பொருட்களை வைத்து சுவாமியை வழிபட்டனர். தனியார் நிறுவனங்கள், பல்வேறுவகையான கடைகள் நடத்தி வருபவர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள எந்திரங்களை சுத்தம் செய்து அவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொட்டு வைத்து மாலை அணிவித்தனர். பின்னர் சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபட்டனர். குளித்தலை பகுதியில் வாடகை கார், வேன் மற்றும் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை சுத்தம் செய்து அதற்கு மாலை அணிவித்து வாழைமரம் கட்டி அலங்கரித்து பூஜை செய்தனர். பின்னர் தங்களது வாகனங்களுடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு முக்கிய நகரப் பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மேலும் விளையாட்டு மைதானங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. ஒரு சிலர் நேற்று தங்கள் கடைகளில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.