திருவண்ணாமலை
மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
|மங்கலத்தில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவலூர்பேட்டைக்கு சாலை விரிவாக்க பணி பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்காக மங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு குறியீடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அந்த மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்றது. அப்போது குறியீடு செய்யப்படாத மரங்களும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறியீடு செய்யப்படாத மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கலம் பகுதியில் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக மரம் வெட்டுவதை நிறுத்தி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.