சென்னை
பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள சேக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அருகில் உள்ள சோராஞ்சேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண்எரிச்சல் ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சோராஞ்சேரியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி நேற்று மாலை பூந்தமல்லி-தண்டுரை சாலையில் அணைக்கட்டுச்சேரி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் சோராஞ்சேரி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதால் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பட்டாபிராம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.