திருவண்ணாமலை
குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
|வேட்டவலம் அருகே இலுப்பன்தாங்கல் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே இலுப்பன்தாங்கல் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய் உடைப்பு
வேட்டவலம் அருகே ராஜன்தாங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட இலுப்பன்தாங்கல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இக்கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வயலூர் ஏரியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து, தினந்தோறும் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஏரியில் இருந்து பைப் லைன் மூலம் வரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதை பழுது பார்க்காததால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அருகில் இருக்கும் வயல்வெளியில் சென்று கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் தொடர்ந்து குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருவண்ணாமலை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.