செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
|மதுராந்தகம் அருகே நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம் கிராம பஸ் நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் நிற்பதில்லை. அந்த பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கலெக்டர் அந்த பகுதி நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இருப்பினும் பஸ்கள் அங்கு நின்று செல்வதில்லை
இதனால் அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கள்ளபிரான்புரம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சென்னை மார்க்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது அங்கு வந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.