திருவண்ணாமலை
பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|வந்தவாசி அருகே பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளார் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தியவாடி ஊராட்சி காட்டுக்காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
இங்கு இந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒன்றிய நிர்வாகத்தால் கட்டிடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சத்தியவாடி கூட்ரோட்டில் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் எங்கள் பிள்ளைகள் மரத்தடியில் கல்வி பயில்கின்றனர். தற்போது மழைக் காலம் என்பதால் எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
புதிய கட்டிடம் கட்டுவது குறித்து கேட்டால் அதிகாரிகள் சரிவர பதில் அளிப்பதில்லை. எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் உடனடியாக கட்டி தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்ததும் தெள்ளார் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.