தேனி
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
|கூடலூரில் குடிநீர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம்
கூடலூர் இரண்டாம்நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்பில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கூடலூரில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அனைத்து வார்டு பகுதிக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் நகரப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. மேலும் 12-வது வார்டு ஜோத்து கவுடர் தெரு பகுதிக்கு வரும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் கூறி வந்தனர். இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
சாலை மறியல்
இதனால் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 11-வது வார்டு ஞானியக் கோனார்தெரு, 12-வது வார்டு ஜோத்து கவுடர் தெரு பகுதியை சேர்ந்்த பொதுமக்கள் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் அருகே நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நகராட்சி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.