திருநெல்வேலி
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
|மூலைக்கரைப்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் செய்தனர்.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு பஞ்சாயத்து ஆனையப்பபுரம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மூலமும் கிடைத்து வந்த தண்ணீர் தற்போது வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை கிராம பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் தலைமையில் காலிக்குடங்களுடன் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகா, பருத்திப்பாடு பஞ்சாயத்து தலைவர் ஊசிக்காட்டான் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.