சேலம்
அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியல்
|அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்:-
ஓமலூர் அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி கோம்பை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த ஆண்டு படித்து வந்தனர். பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் மாதம் ரூ.1000 வாடகைக்கு கடந்த 8 மாதமாக பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. இந்த நிலையில் பள்ளி இயங்கும் வாடகை கட்டிடத்திற்கும் கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்காததால் கட்டிடத்தின் உரிமையாளர் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளும் படிகூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுடன் பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிட வசதி கோரி நேற்று காலை தீவட்டிப்பட்டி பொம்மியம்பட்டி முதல் கொங்கரப்பட்டி செல்லும் சாலையில் கோம்பை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன், தீவட்டிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், பொம்மியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளி இயங்கும் தனியார் கட்டிடத்தின் உரிமையாளரிடம் பேசி மேலும் 10 நாட்கள் கால அவகாசம் பெற்றனர்.இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.