சென்னை
போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
|சென்னை அம்பத்தூரில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம், எம்.சி.ராஜா தெருவில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டாக வசித்து வருகின்றனர். இதே பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை அவர் தனது நிலம் எனக்கூறி அந்த பாதையை அடைத்து சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, அந்த போலீஸ் உயர் அதிகாரி அடியாட்களை வைத்து அடித்ததாகவும், இது குறித்த புகாரை போலீசார் விசாரிக்க மறுப்பதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு விஜயலட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் திடீரென செங்குன்றம்-அம்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.