விழுப்புரம்
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
|குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள், காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
விழுப்புரம் நகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு நகராட்சி சார்பில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றக்கூடிய மின் மோட்டார் பழுதடைந்தது காரணமாக கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீருக்காக காலி குடங்களை தூக்கிக்கொண்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் உள்ள நகராட்சி பொது குடிநீர் குழாயடியை தேடிச்செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், நேற்று காலை 10.15 மணியளவில் காலி குடங்களுடன் அங்குள்ள மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
உடனடி நடவடிக்கை
பின்னர் விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மின் மோட்டார் பழுதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், மேலும் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதை ஏற்ற அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.