திருவள்ளூர்
பேரம்பாக்கத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
|பேரம்பாக்கத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட பேரம்பாக்கம் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வருகிறது. இதனால் சிறு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அவர்கள் பேரம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தடையான நிலையில் மறுநாள் மதியம் ஒரு மணி வரையிலும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரம்பாக்கத்தில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலை மற்றும் பூந்தமல்லி செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரம்பாக்கம் மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அந்த வழியாக சுமார் 1½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.