திருவள்ளூர்
உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
|ஆவடி,
ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 55). இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய நேற்று மாலை கோவில்பதாகையில் உள்ள இஸ்லாமியர் சுடுகாட்டில் உறவினர்கள் இடம் கேட்டனர். ஆனால் அங்கு போதிய இடம் இல்லை என கூறிவிட்டதாக தெரிகிறது.
இதனால் செய்வதறியாது திகைத்த பாத்திமாவின் உறவினர்கள், வெள்ளானூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஆவடி - செங்குன்றம் சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, வருவாய் அலுவலர் ஜனனி, வி.ஏ.ஓ குமார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கோவில்பதாகை பகுதியில் உள்ள சுடுகாட்டில் பாத்திமா உடலை நல்லடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.