விழுப்புரம்
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செண்டூரைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைமகள் சபாவிற்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள். எங்களுக்கு சொந்தமாக வீடோ, விளைநிலமோ இல்லை. யாரும் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யவில்லை. அரசு சலுகைகளும் நாங்கள் பெறவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகளாக வசித்துவரும் 250 பேரின் குடும்பங்களுக்கு கலைமகள் சபாவிற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி எங்களுக்கு இலவசவீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தனர்.