திருவள்ளூர்
சோழவரம் அருகே தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்
|சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் தனியார் இனிப்பு தொழிற்சாலை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தொழிற்சாலை கழிவுநீர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் ஆகியோருக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த ஊராட்சியைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இனிப்பு தயாரிக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பூதூர் கிராமத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.