விழுப்புரம்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|பள்ளி, கோவில்கள் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
விழுப்புரம்
முற்றுகை போராட்டம்
விழுப்புரம் முத்தோப்பு, அகரம்பாட்டை, சித்தேரிக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி கோஷம் எழுப்பியவாறு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடையை மூடக்கோரி...
விழுப்புரம் நகரம் அகரம்பாட்டையில் குடியிருப்புக்கு மத்தியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 7-ந் தேதி அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. அகரம்பாட்டை வழியாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சித்தேரிக்கரை, முத்தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக சென்னை நெடுஞ்சாலைக்கு சென்று வருகின்றனர். மேலும் அங்கு 2 கோவில்கள், திருமண மண்டபங்கள், பள்ளிவாசல், பள்ளிக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. இளைய சமுதாயத்தினர், இந்த டாஸ்மாக் கடையினால் முற்றிலும் சீரழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த டாஸ்மாக் கடையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், அசாதாரண சூழல்கள், இயல்புவாழ்க்கைக்கு எதிராக நேரிடும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். இதை ஏற்று, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.