கன்னியாகுமரி
குமரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
|குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயில்
குமரி மாவட்டத்தில் இருபருவ மழையும், கோடை மழையும் தவறாமல் பெய்யும். இதனால் கோடை காலம் என்பது குமரி மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் தொந்தரவாக தெரியாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடை வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் சற்று தெரியும். அக்னி நட்சத்திர நாட்களில் அதைவிட சற்று கூடுதலாக இருக்குமே தவிர வெயில் வாட்டி வதைத்தது இல்லை.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழியில் பனி பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது வெயிலால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். காலை 10 மணிக்கு மேல் தெருவில் இறங்கி நடக்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். வேலை காரணமாக வெளியே சென்று தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே செல்கிறார்கள். அப்படி வெளியே செல்கிறவர்கள் வெயிலில் காய்ந்து கடுமையான அவதிக்கு ஆளாகிறார்கள்.
குளிர்ந்த நீராகாரங்கள்
பகலில் பஸ்களிலும், வாகனங்களிலும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பஸ்களில் ஜன்னலோர இருக்கைக்கு யாரும் ஆசைப்படுவது இல்லை. வீசும் காற்று அனலாய் சுடுகிறது. வெயிலின் தாக்கத்தால் உடலில் உஷ்ணம் அதிகரித்து மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பகல் முழுவதும் வெப்பம் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இரவிலும் புழுக்கம் அதிகமாக உள்ளது.
வெப்பத்தின் கொடுமைகளை சமாளிக்க மக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான பெண்களும், முதியவர்களும் குடை பிடிக்காமல் வெளியே நடப்பதில்லை. இளநீர், நுங்கு, சர்பத், மோர், தர்ப்பூசணி, கரும்பு ஜூஸ் போன்ற குளிர்ந்த நீராகாரங்களை அவ்வப்போது பருகி வருகிறார்கள்.
மார்ச் மாதத்திலேயே இப்படி வெயில் அடித்தால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெயிலின் கொடுமை எப்படி இருக்குமோ? என்று பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.