திருவள்ளூர்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் அவதி
|பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை் தொட்டி உள்ளது. அதேபோல் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்குள் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டியும், பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகர் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டியும், ஈச்சம்பாடி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டியும் உள்ளது. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
அதன்பின் காலை 6 மணிக்கு குழாய்களின் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 1,500 வீட்டு குழாய் இணைப்புகளும், 50-க்கும் மேற்பட்ட தெரு குழாய்களும் உள்ளன. நேற்று குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றாமல் பேரூராட்சி ஊழியர் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் காலை 6 மணி முதல் குழாய்களில் தண்ணீரை எதிர்பார்த்து காத்து இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் குழாய்களில் ஏன் தண்ணீர் வரவில்லை? என்று அவர்கள் பேரூராட்சி ஊழியர்களை கேட்டபோது குடிநீர் ஏற்றும் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் போதிய அளவு மின்சாரம் வழங்காமல் குறைந்த அளவு மின்சாரம் வழங்கியதால் குடிநீர் ஏற்ற முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து மின்சார துறை ஊழியர்களை கேட்டபோது பேரூராட்சியில் 3 மின்சார மோட்டார்கள் பழுதாகி உள்ளன. அதனால் அவர்கள் குடிநீரை ஏற்றாமல் அலட்சியமாக இருந்துள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் குடிக்க நீரின்றி பொதுமக்கள் பல இடங்களுக்கு காலி குடங்களுடன் அலைந்தனர். சிலர் ரூ.1000 கொடுத்து டிராக்டர்கள் மூலம் குடிநீரை வரவழைத்தனர். சிலர் அந்த டிராக்டர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட குடிநீரை தங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் குடங்களில் பிடித்து கொள்ள அனுமதி வழங்கினார்கள்.
இதனால் பொதுமக்கள் அந்த டிராக்டர்களில் வரவழைக்கப்பட்ட தண்ணீரை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து சென்றனர். இனியாவது சீரான முறையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீரை ஏற்றி நகர மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.