திருவள்ளூர்
துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
|துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சியில் அடங்கியது நாலூர் கம்மவர்பாளையம். இந்த கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆற்றிலிருந்து நாலூர் ஏரிக்கு வரத்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய்க்கு பக்கத்தில் ஒரு ஏக்கர் 35 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த அரசு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இதற்கு நாலூர் கம்மவார்பாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும், ஊராட்சியின் அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தததை கண்டித்து பொதுமக்கள் சாலை அமைக்கும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அரசு அங்கீகாரம் இல்லாத இடத்தில் சாலை அமைக்கும் பணியினை நிறுத்தினர்.