< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: பிரதமர் மோடி

தினத்தந்தி
|
19 March 2024 7:30 AM IST

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

கோவை,

கோவைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை பிரமாண்ட வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டார். இந்த வாகன அணிவகுப்பு மாலை 6.10 மணிக்கு தொடங்கி இரவு 7.10 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ந் தேதி கோவையில் ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரு இடமான, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு தலைமை தபால் நிலைய பகுதியில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும், பலியானவர்கள் குறித்தும் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பொதுமக்களும் பதிலுக்கு உற்சாகத்துடன் கையசைத்தனர். அதன்பிறகு 7.20 மணியளவில் பிரதமர் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கோவை விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- 1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று(நேற்று) இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்