< Back
மாநில செய்திகள்
விமான சாகச நிகழ்ச்சி:  போதிய ரெயில்களை இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சி: போதிய ரெயில்களை இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 Oct 2024 3:46 PM IST

இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்ட பின் பொதுமக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

சென்னை,

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி அசர வைத்தனர். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பகல் 1 மணியுடன் விமான வான் சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 2 மணி நேரம் மட்டுமே வான் சாகச நிகழ்வு நடந்தது. உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையை சென்னை விமான சாகச நிகழ்வு படைத்தது. சென்னையில் நடைபெற்ற விமான வான் சாகசத்தை நேரில் சுமார் 15 லட்சம் பேர் கண்டு களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பொதுமக்கள் வாகனங்களில் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பலர் அரசு பஸ்கள் மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பஸ்கள் மற்றும் மினிபஸ்கள் இயக்கப்பட்டன.

அதேசமயம், வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரெயில்களை தெற்கு ரயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று அரை மணிநேரத்திற்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டதால் வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ரெயிலுக்காக காத்திருந்தனர்.

ஒரு ரெயில் வந்தாலும், ரெயில் கொள்ளாத அளவுக்கு, மக்கள் முண்டி அடித்துக்கொண்டு ஏறினர். இளைஞர்கள் பலர் தொங்கிக்கொண்டே பயணம் செய்தனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியது. ரெயில் வர நீண்ட நேரம் ஆனதால், சிலர் வீபரீதம் தெரியாமல் தண்டவாளங்களில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரெயில் தண்டவாளங்களில் பொதுமக்கள் சென்றது அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், சென்னை மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்வை பார்க்கச் செல்லாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

அதேபோல, சென்னை விமான சாகச நிகழ்வு முடிந்த பின்னரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ரெயில் நிலையங்களிலும் மிகக் கடுமையான கூட்டம் காணப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விமான சாகச நிகழ்வுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என்ற சூழலில் எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல், தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்றும் அரை மணி நேரத்துக்கு ஒரு ரெயிலை இயக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்ட பின் வீடு திரும்ப சென்னை மெரினா கடற்கரையிலிருந்து சாரை சாரையாக மக்கள் வெளியேறி வருகின்றனர். 2 மணி நேரத்தை கடந்தும் பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும் செய்திகள்