பெரம்பலூர்
பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
|பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்கரபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் 70 வயது நிறைவடைந்தவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு நியாயமான குறைந்த பட்ச ஓய்வூதியமும், கருணை தொகையும் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தர வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். மருத்துவப்படி மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். டிசம்பர் 17-ந்தேதி தேசிய ஓய்வூதியர் தினத்தை அரசு சார்புள்ள விழாவாக கொண்டாட ஆணை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.