திருச்சி
மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
|மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருச்சி திருவெறும்பூர் மற்றும் லால்குடி ஆகிய தாலுகாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது மாட்டு வண்டி மூலம் மணல் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மணல் குவாரியில் மணல்களை கொள்முதல் செய்ய தினசரி காலை 7 மணி முதல் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மாட்டு வண்டிகள் வரும் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் காலை 10 மணிக்கு மாட்டு வண்டிகள் மணலை கொள்முதல் செய்ய நேரம் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 110-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள் மணல் சேமிப்பு கிடங்கில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் பழைய நடை முறையான காலை 7 மணி முதல் மணல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தினை கைவிட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தைத் கைவிட்டு கலைந்து சென்றனர்.