விருதுநகர்
நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
|நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் அறிவுறுத்தினார்.
நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் கலந்துகொண்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
நிலுவையில் உள்ள பணி
அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திடவும் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்ச்சி பெற்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவரையும் உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரியில் விண்ணப்பம் செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்கவும், பணிகளுக்கான ஆணைகள் வழங்கி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மருத்துவ முகாம்
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான மருந்துகளை இருப்பு வைப்பது குறித்தும் ஆய்வு செய்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ள பல்நோக்கு மருத்துவ முகாம் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் டாக்டர் தண்டபாணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.