தேனி
பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம்
|கடமலைக்குண்டு பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடமலைக்குண்டுவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவதில்லை. மேலும் தனியார் ஆட்டோ, லாரி நிற்கும் இடமாக மாறியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தியிருந்த லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை அதிரடியாக வெளியேற்றினர். மேலும் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்த கூடாது என்று அறிவிப்பு பலகையை வைத்தனர். அதனை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் சந்திரா தங்கம் தெரிவித்தார். அவருடன் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி இருந்தார்.