< Back
மாநில செய்திகள்
நிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை செயல்பாட்டை தவறாக பயன்படுத்தியவருக்கு அபராதம் -ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

நிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை செயல்பாட்டை தவறாக பயன்படுத்தியவருக்கு அபராதம் -ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
19 Aug 2023 2:08 AM IST

நிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை செயல்பாட்டை தவறாக பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கொளத்தூர் ஜெயந்தி நகரில் என் தந்தை பெயரில் உள்ள சொத்துகளில் ஒரு பகுதியை என் பெயருக்கு என் தாயார் கடந்த 2014-ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். அந்த நிலத்துக்கு பட்டா வழங்க கோரி 2020-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை. எனவே, என் விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டா வழங்க சென்னை கலெக்டர், மண்டல வருவாய் அலுவலர், அயனாவரம் தாசில்தார் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் குறிப்பிட்டுள்ள சர்வே நம்பரில் 20 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர் 3,710 சதுர அடி நிலத்தின் மீது மட்டும் உரிமை கோரியிருந்தார். அவரது செட்டில்மென்ட் பத்திரத்தை பார்க்கும்போது சந்தேகம் எழுந்தது.

அபகரிக்க முயற்சி

இதனால், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இதன்படி தாசில்தார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "மனுதாரர் தன் தந்தை பெயரில் நிலம் இருந்ததாக கூறினாலும், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாமல், மனுதாரருக்கு அவரது தாயார் சொத்தை எழுதிக்கொடுத்துள்ளார். அந்த நிலத்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் பாதையாக பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள நிலம் ரெஜியா பேகம் என்பவருக்கு சொந்தமானது" என்று கூறியிருந்தார்.

எனவே, மனுதாரர் தவறான தகவல்களை தாக்கல் செய்து, ஐகோர்ட்டு அல்லது அதிகாரிகளிடம் உத்தரவுகளை பெற்று நிலத்தை அபகரிக்க முயற்சித்துள்ளது தெரிகிறது.

அபராதம்

நீதித்துறையின் செயல்பாட்டை தவறாக பயன்படுத்த முயற்சித்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை வருகிற 22-ந்தேதிக்குள் ஐகோர்ட்டு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்