சேலம்
சேலம் மாவட்டத்தில் 'ஏர்ஹாரன்' பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
|சேலம் மாவட்டத்தில் சோதனையின் போது ஏர்ஹாரன் பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் சோதனையின் போது ஏர்ஹாரன் பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஏர்ஹாரன் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் சில தனியார் பஸ்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பயன்படுத்துவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன் (பொறுப்பு, கிழக்கு), ரகுபதி (பொறுப்பு, மேற்கு) தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு புறப்பட தயாராக இருந்த தனியார் பஸ்களில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
32 பஸ்களுக்கு அபராதம்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:-
தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா? என சேலம் புதிய பஸ் நிலையம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பஸ் நிலையங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில் 32 தனியார் பஸ்களில் இருந்து ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.