மதுரை
மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா தேவையா?
|மக்கள் கடனில் இருக்கும் போது ரூ.80 கோடிக்கு கடலில் பேனா தேவையா? என்று செல்லூர் ராஜூ பேசினார்.
மக்கள் கடனில் இருக்கும் போது ரூ.80 கோடிக்கு கடலில் பேனா தேவையா? என்று செல்லூர் ராஜூ பேசினார்.
போராட்டம்
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக தினமணி தியேட்டர் அருகே இந்த போராட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்வு அறிவித்தவுடன், ஸ்டாலின் போராட்டம் நடத்திய புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. முடிவில் செல்லூர் ராஜூ பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்ற வில்லை. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறார்கள். மதுரையில் ரூ.200 கோடியில் கலைஞர் நூலகம் கட்டுகிறார்கள். இப்போது கடலில் ரூ.80 கோடியில் பேனா வைக்கிறார்கள். இதற்கெல்லாம் நிதி இருக்கும் மக்களுக்கான திட்டங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?.
வேலைவாய்ப்பு
தமிழக மக்கள் கடனில் தவிக்கும் போது, கடலில் பேனா தேவையா என்பதனை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் பசி-பட்டினியில் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை. விலைவாசி உயர்ந்து விட்டது. பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தார்கள். ஆனால் இந்த திட்டம் தொடங்கும் போது, மதுரையில் 350 பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதாக சொன்னார்கள். ஆனால் இப்போது வெறும் 35 பஸ்களில் தான் பெண்கள் இலவசமாக செல்ல முடிகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
தி.மு.க. ஆட்சியில் வந்ததில் இருந்து மின் தடை இருக்கிறது. வராத மின்சாரத்திற்கு, மின் கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று பொய் சொல்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேலிக்கூத்தாக இருக்கிறது. நீட் தேர்வு கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து பிறகு 2 நீட் தேர்வுகள் நடந்து விட்டது. அன்றைக்கு நீட் மரணத்தை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. உலக செஸ் போட்டி சென்னையில் நடக்கிறது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் ஸ்டாலின், பேண்ட்-சட்டை போட்டு வருகிறார். ஆனால் மாமல்லபுரத்தில் நடந்த சீன அதிபர் சந்திப்பின் போது மோடி வேட்டி-சட்டை போட்டு தமிழக கலாசாரத்தை பிரதிபலித்தார். இந்த செஸ் போட்டி வீடியோவில் சாதனை படைத்த தமிழக செஸ் வீரர்கள் யாரும் அதில் இடம் பெறவில்லை.
திண்டுக்கல் பூட்டு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மது ஆலைகள் மூடப்படும் என்று சொன்ன கனிமொழியை இன்று காணவில்லை. தி.மு.க.வுடன் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் எல்லாம் மக்கள் பிரச்சினைகளை கண்டு மவுனமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது வாயில் திண்டுக்கல் பூட்டை போட்டு பூட்டி கொண்டார்கள். வெறும் 4 சீட்டுக்காக அவர்கள் எல்லாம் விலை போய் விட்டீர்கள். வைகோ என்ற புலி, இப்போது பூனை ஆகிவிட்டது. தி.மு.க.வுக்கு அடுத்து நாங்கள் தான் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஆப்பு கொடுக்கும் வகையில், இன்று அ.தி.மு.க. வினர் இங்கு கூடி இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. தான். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.