கடலூர்
அனைத்து கட்சி சார்பில் இன்று நடக்க இருந்தரெயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்புஅதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
|அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து கடலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருந்த ரெயில் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக அனைத்து கட்சியினர் ஒத்தி வைத்தனர்.
ரெயில் மறியல் அறிவிப்பு
திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தாம்பரம்- விழுப்புரம் வரையுள்ள பயணிகள் ரெயிலை திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
இந்த வழியாக செல்லும் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, திருச்சி கோட்ட ரெயில்வே முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்ரீதர், போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன், முதுநிலை பொறியாளர்கள் விஜயசுந்தரம், பாலசுப்பிரமணியன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், நகர செயலாளர் அமர்நாத், மாவட்ட நிர்வாகி பக்கீரான், வி.சி.க. நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், துணை மேயருமான தாமரைசெல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், குடியிருப்போர் சங்கம் மருதவாணன், வெங்கடேசன், பொது நல அமைப்பு ரவி, மக்கள் அதிகாரம் பாலு, மீனவர் பேரவை சுப்புராயன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பு
கூட்டத்தில் கட்சியினர், பொது நல அமைப்பினர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதை கேட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், தாம்பரம்- விழுப்புரம் ரெயிலை கடலூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் என்று பெயர் மாற்ற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை கடிதம் தந்தால், பெயர் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும், சில கோரிக்கைகளை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர், பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதும், அனைத்து கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருந்த ரெயில் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி சென்றனர்.