இன்று முதல் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்படும் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
|இன்று முதல் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்படும் என மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கான தொகை 80 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் பயிர்களை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதன் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் பூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பூட்டிக்கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்படும் எனவும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு ஏலம் நடத்தப்பட்டு அவர்களுக்கு பணப்பட்டுவாடா வழக்கம் போல் செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே 362 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 80 லட்சத்தையும் இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன், வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ் பாபு, சந்திரகுமார், வியாபாரிகள் சங்க தலைவர் முகமது கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.