கள்ளக்குறிச்சி
3 ஏக்கர் நிலத்தை இருதரப்பினர் உரிமை கொண்டாடியதால் அமைதி பேச்சுவார்த்தை
|திருக்கோவிலூரில் 3 ஏக்கர் நிலத்தை இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தொழுகை நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கோரி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருக்கோவிலூர்
3 ஏக்கர் நிலம்
திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் உள்ள சந்தப்பேட்டையில் துணை மின் நிலையம் அருகே மசூதி என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் திருக்கோவிலூர் பகுதி தலைவருமான பசல்முகமது மற்றும் நிர்வாக குழுவினர்கள் கீற்று கொட்டகை அமைத்து தொழுகை நடத்த தொடங்கினர்.
இதே இடத்திற்கு உரிமை கோரி சந்தப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மனைவி ஜெயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கள் தரப்பில் உள்ள ஆவணங்களை காட்டி மேற்படி இடத்தில் உள்ள கீற்று கொட்டகையை உடனே அகற்றி இடத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்போது அந்த பகுதி முஸ்லிம்கள் குறிப்பிட்ட இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனவும், அரசு பதிவேட்டிலேயே மசூதி என்ற பெயரில் தான் உள்ளது என்றனர்.
அமைதி பேச்சுவார்த்தை
பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பசல்முகமது தரப்பினர், ஜெயலட்சுமி தரப்பினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஷ், பழனி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலகத்தின் மெயின்கேட்டை மூடிவிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தை நாடி...
கூட்டத்தில் பிரச்சினைக்குரிய இடத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தடை உத்தரவு உள்ளதால் இரு தரப்பினரும் அந்த இடத்தில் நுழைய அனுமதி இல்லை, குறிப்பிட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பதை ஆவணங்களின் அடிப்படையில் உரிமை கோர நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்வது என்றும், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பிரச்சினைக்குரிய இடத்தில் யாரும் நுழையக்கூடாது எனவும், கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. 2004-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவு வரும் வரை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் குறைந்தது 5 பேர் தொழுகை நடத்துவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று தர வேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
சுமார் அரை மணி நேரம் காத்திருந்த பின்னரும் அதிகாரிகளிடம் இருந்து பதில் ஏதும் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாலுகா அலுவலகத்தின் எதிரே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட பசல்முகமது உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை திருக்கோவிலூர் போலீ்ஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இ்ந்த பிரச்சினை தொடர்பாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரிடம் பேசி தீர்வு காணலாம் என்றார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.