சென்னை
ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும் - தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி வலியுறுத்தல்
|ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும் என தொழில் நிறுவனங்களை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற அரசுத்துறை சார்ந்த அதிகாரி, பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து 6 மாதத்துக்கு ஒருமுறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி பெயரில் காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாக மாநகராட்சி உரிம ஆய்வாளர்களிடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் மின்னணு சேவை வழியாகவும் வரி செலுத்தலாம்.
www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம் மூலமாக எந்தவித பரிமாற்ற கட்டணமில்லாமல் தொழில்வரி செலுத்தலாம். மண்டலங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் தொழில்வரியை செலுத்தலாம்.
எனவே, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் ஆகஸ்டு மாதம் தொழில் வரியினை பிடித்தம் செய்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அதற்குண்டான விவரங்களுடன் தாக்கல் செய்து தொழில் வரியை செலுத்திடவேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் கணக்கீடு செய்து வசூலிக்கப்படும். மேலும் மாநகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.