< Back
மாநில செய்திகள்
நடைபாதை சிமெண்டு தளம் இடிந்து விழுந்த பாலம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

நடைபாதை சிமெண்டு தளம் இடிந்து விழுந்த பாலம் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
2 Dec 2022 6:45 PM GMT

நடைபாதை சிமெண்டு தளம் இடிந்து விழுந்த பாலம் சீரமைக்கப்படுமா?

வடபாதிமங்கலத்தில் நடைபாதை சிமெண்டு தளம் இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் கிளியனூர் மாதாகோவில் தெரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்டு தளம் அமைப்பு கொண்ட நடைபாலம் வெண்ணாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தை கிளியனூர் மாதாகோவில் தெரு, புனவாசல், பழையனூர், சாத்தனூர், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள்-பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை சிமெண்டு தளம் சில இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

சிமெண்டு தளம் இடிந்து விழுந்தது

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாலத்தை கடந்து சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடிந்து விழுந்த இடத்தில் மாற்று தளம் அமைத்து சீரமைப்பு செய்தனர். இந்த நிலையில் சீரமைப்பு செய்த அதே பாலத்தில் மீண்டும் முகப்பில் உள்ள சிமெண்டு தளம் சில கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. மேலும் தளம் சேதமடைந்து உள்ளதால் அடுத்தடுத்து தளம் சரிந்து ஆற்றில் விழும் வாய்ப்பு உள்ளது.

சீரமைத்து தர வேண்டும்

இதனால் வழக்கமாக பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று ஏனைய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்கள் உள்ளதாகவும், அவசர தேவை நேரங்களில் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிமெண்டு தளம் முழுவதையும் அகற்றி விட்டு பாலத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்