சென்னை
9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா
|9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
தொழில் முனைவோருக்கு பட்டா
சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் 208 தொழில்முனைவோர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கி, பட்டா வழங்கினார். தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண்ராய், சிட்கோ, மேலாண்மை இயக்குனர் சோ.மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
1970-ம் ஆண்டு மு.கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, குறு, சிறு, நடுத்தர தொழில் புரிவோருக்காக சிட்கோ தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 983 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த 127 தொழிற்பேட்டைகளில் 60 தொழிற்பேட்டைகளில் உள்ள 3,700 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு வகைப்பாட்டில் இருப்பதால், தொழில் நிறுவனங்கள் கிரைய பத்திரம் பெற்றிருந்தாலும், பட்டா பெற முடியாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது.
208 பேருக்கு...
இதனால், தொழில்முனைவோர்கள் நிலத்தினை வைத்து கடன் பெறுவதும், தொழிலை விரிவுபடுத்தவும் முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில்முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்காக நில வகைப்பாட்டினை மாற்ற தலைமைச்செயலர் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, முதல்கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதனடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை சேர்ந்த 5 தொழில்முனைவோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.