< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்லும் நோயாளிகள்

தினத்தந்தி
|
8 March 2023 6:45 PM GMT

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி

அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளை கொண்டது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் வந்து செல்ல வேண்டும். இந்த ஆஸ்பத்திரியில் இதய நோய் சிறப்பு டாக்டர் இல்லாததால், சில நேரங்களில்

மாரடைப்பு போன்ற இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள முடியாததால் அவர்கள் இறந்து போகும் சூழ்நிலை உள்ளது.

சிகிச்்சை பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர்

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு நகராட்சி மற்றும் கிரமங்களிலிருந்தும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் மருத்துவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் ஒரே ஒரு டாக்டர் உள்ள நிலையில் மற்ற டாக்டர்கள் அங்கு இல்லாததை கண்டு சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் இல்லாததால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொலை தூரப்பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விடுகின்றனர். அப்போது செல்லும் வழியில் தாய்-சேய் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதனால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ெதாற்றுநோய் பரவும் அபாயம்

மாத்திரை சீட்டு வாங்கும் இடத்தில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுகளால் துர்நாற்றமும், கொசுக்களும் உற்பத்தியாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவ சிகிச்சைக்காக கூடுதல் டாக்டர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும்

இதுபற்றி ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் சேக்தாவூது கூறுகையில், அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு-பகலும் நிரந்தரமாக டாக்டர்கள் இல்லாததாலும் முறையான சிகிச்சை அளிக்கப்பட முடியாமல் போய்விடுகிறது. அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் போது அங்கு ரத்த வங்கி இல்லாததால் உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடுகிறது. பகல் நேரத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் இருக்கும் நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச்செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்