மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உடல்கருகி பலி
|அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நடபுரம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 57). உடல்நலக்குறைவு காரணமாக சுலோச்சனா உலியரி பகுதியில் உள்ள மலபார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சுலோச்சனாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவசர சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
ஆம்புலன்சில் சுலோச்சனா, அவரது கணவர் சந்திரன், உறவினர் பிரதீப், 2 செவிலியர்கள் ஆகியோர் பயணித்தனர். கழுத்தன்கடவு பகுதியில் அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் தீப்பற்றியது.
உடனடியாக, டிரைவர், செவிலியர்கள், சுலோச்சனாவின் கணவர் சந்திரன், உறவினர் பிரதீப் ஆகியோர் ஆம்புலன்சில் இருந்து வெளியேறினர். ஆனால், நோயாளியான சுலோச்சனாவால் ஆம்புலன்சில் இருந்து வெளியேற முடியவில்லை.
இதனால், ஆம்புலன்சில் சிக்கிய சுலோச்சனா தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைந்து அறிந்த போலீசார், தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்சில் பற்றி எரிந்த தீயை வெகுநேரம் போராடி அணைத்தனர். ஆம்புலன்சில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்த சுலோசனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.