கரூர்
கரூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை இன்றி தவிக்கும் பயணிகள்
|வாட்டி வதைக்கும் வெயிலால் கரூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை இன்றி பயணிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் பஸ் நிலையம்
கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வாங்கல், தென்னிலை, சோமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் சென்று வருகின்றன. டெக்ஸ்டைல்ஸ், கொசு வலை, பஸ்கூடு கட்டுதல் போன்ற முக்கிய தொழில்களை கொண்ட பகுதியாக கரூர் விளங்கி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காகவும், மற்ற பணிகளுக்காகவும் கரூர் வந்து செல்கின்றனர். மேலும் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று திரும்பி வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கட்டிடம் இடிப்பு
இந்நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் தென்பகுதியில் இருந்த கட்டிடத்தில் கடைகள் மற்றும் அதன்மேல் பல்வேறு அலுவலகங்கள் அமைந்திருந்தன. இந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து அவ்வப்போது பெயர்ந்து கீழே விழத் தொடங்கியதால் கரூர் மாநகராட்சி நிர்வாகம் அந்த கட்டிடத்தின் தன்மை குறித்து ஆராய்ந்து கட்டிடத்தை இடிக்க முடிவு செய்து, கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டது. இப்போது அந்த கட்டிடம் இருந்த இடம் காலியாக உள்ளது. அந்த பகுதியில் தான் திருச்சி, மதுரை, திண்டுக்கல், பழனி உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி போன்ற உள்ளூர் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும். இப்போதும் இந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அப்பகுதியில் நின்றுதான் பஸ் ஏறி சென்று வருகின்றனர்.
தற்காலிக நிழற்குடை
இந்நிலையில் பஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதியில் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தற்போது கடும் வெயிலில் நின்று வருகின்றனர். மேலும் மதிய நேரங்களில் பஸ் நிலையத்தில் நிற்கும் பஸ்களின் நிழலில் நிற்கும் அவல நிலை உள்ளது. தற்போது கரூரில் 102 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த வெயிலில் பயணிகள் காத்திருந்து பஸ்சுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் வெயிலினால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கரூர் மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக உடனடியாக தற்காலிக நிழற்குடையோ அல்லது பந்தலோ அமைத்து தர வேண்டும் என்றும், கடும் வெயிலில் இருந்து பயணிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.