< Back
மாநில செய்திகள்
குளித்தலை வழியாக இயங்கிய 6 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை வழியாக இயங்கிய 6 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

தினத்தந்தி
|
22 May 2022 6:24 PM GMT

குளித்தலை வழியாக இயங்கிய 6 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குளித்தலை,

பயணிகள் ரெயில்கள்

திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள முக்கியமான பகுதியாக குளித்தலை உள்ளது. இங்கு உள்ள ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் திருச்சி மற்றும் கரூர் மார்க் கமாக 16 விரைவு மற்றும் பயணிகள் ரெயில்கள் நின்று செல்கிறது. இதனால் குளித்தலை நகரம் மற்றும் இதைச்சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து குளித்தலை ரெயில்நிலையம் வழியாக சென்னை, பெங்களூர், மைசூர், உள்ளிட்ட ஊர்களுக்கும், திருச்சி மற்றும் கரூர் மாவட்ட பகுதியில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணித்து வந்தனர்.பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதாலேயே பெரும்பாலானோர் ரெயில்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டு வந்தனர். அதிலும் திருச்சியில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரெயில் குளித்தலை ரெயில் நிலையத்திற்கு காலை 7.45-க்கு வந்து செல்லும்.

இயக்கப்படவில்லை

இந்த ரெயிலில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கரூர் நகரப்பகுதியில் உள்ள டெக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கும், அரசு வேலைக்கும் சென்று வந்தனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக குளித்தலை வழியாக திருச்சி மார்க்கமாக இயக்கப்பட்டுவந்த ஈரோடு - திருச்சி (காலை 10 மணி), கரூர் - திருச்சி (மாலை 4.15 மணி), ஈரோடு - திருச்சி (இரவு 7 மணி), குளித்தலை வழியாக கரூர் மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த திருச்சி - ஈரோடு (காலை 7.45 மணி), திருச்சி - கரூர் (காலை 10.30 மணி) மற்றும் திருச்சி - ஈரோடு (மாலை 5.10 மணி) ஆகிய 6 ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்துவந்த பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் தினசரி ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரெயில்கள் இயக்கப்படாத காரணத்தால் கூடுதலாக பணம் செலவு செய்து பஸ்களில் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.

சிறப்பு ரெயில்கள்

தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான மாத வருவாயில் பஸ் கட்டணத்திற்காக மட்டும் அதிக தொகையை செலவிடும் நிலை உள்ளது. அதனால் தங்கள் குடும்பத்தை நடத்த போதுமான வருவாய் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை நேரத்தில் கரூரில் இருந்து திருச்சிக்கு தற்போது சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது.ஆனால் இந்த ரெயிலில் திருச்சிக்கு செல்ல ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.10 மட்டும் டிக்கெட் கட்டணமாக இருந்து வந்தநிலையில் தற்போது கூடுதல் தொகை செலுத்தி ரெயிலில் பயணிக்க வேண்டியதால் ரெயிலில் பயனம் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பின்பற்றி வந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தற்போது சகஜ நிலை நிலவி வருகிறது. எனவே ரெயிலில் பயணிக்கும் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இயக்கப்படாமல் உள்ள ரெயில்களை குளித்தலை ரெயில்நிலையம் வழியாக மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், ரெயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்