அரியலூர்
போதிய இருக்கைகள் இல்லாததால் தரையில் அமரும் பயணிகள்
|போதிய இருக்கைகள் இல்லாததால் தரையில் பயணிகள் அமரும் நிலை உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பழைய பஸ் நிலையம் சேதமடைந்த நிலையில், அதன் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்ல பயணிகள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படுவது வழக்கம். மேலும் அரசு பள்ளிகளுக்கும், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊர் செல்ல பஸ் ஏறுவதற்கு பஸ் நிலையத்துக்கு வந்து காத்து நிற்பார்கள். ஆனால் இங்கு போதிய அளவு இருக்கை வசதி இல்லாததால் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் தரையில் அமருகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் போதிய அளவு இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன. அந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினால் புதிய பஸ் நிலையத்துக்கு போதிய அளவு இடம் கிடைக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர்.