பெரம்பலூர்
பயணிகள் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
|பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ரெயில் நிலையமான சில்லக்குடியில் பயணிகள் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே ரெயில் நிலையமான சில்லக்குடி ரெயில் நிலையத்தில் விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயில் கொரோனாவிற்கு முன்பு தினமும் 6 முறை நின்று செல்வது வழக்கம். ஆனால் கொரோனாவிற்கு பிறகு சில்லக்குடி ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் 4 முறை தான் நின்று செல்கிறது.
ரெயில் நின்று செல்ல வேண்டும்
விழுப்புரத்தில் இருந்து மதுரை செல்லும் போது சில்லக்குடியில் காலை 8.25 மணிக்கும், மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் சில்லக்குடியில் மாலை 6.50 மணிக்கும் அந்த ரெயில் நின்று செல்வதில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமான காய்கறிகள் விளையும் சில்லக்குடி கிராமத்தில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை ரெயிலில் எடுத்து செல்வதில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட நேரத்திலும் அந்த பயணிகள் ரெயிலை சில்லக்குடியில் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆடுகள் வாங்க கடன் வழங்க வேண்டும்
மேலும் நாம் தமிழர் கட்சியின் குன்னம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜோக்கியம் கொடுத்த மனுவில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் கொடுத்த மனுவில், எங்கள் சமுதாய மக்களை வண்ணார் சாதி என்று அழைத்து வருகின்றனர். அப்படி அழைக்காமல் இருக்க தமிழக அரசின் அரசாணைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வரிசை எண் 36-ல் உள்ளபடியும், மத்திய அரசின் அரசாணைப்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசை எண்156-ல் உள்ளபடியும் அழைக்கவும், அதற்கான ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் எங்கள் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
குரும்பலூர் தோப்பு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 22 பேருக்கு ஆடுகள் வாங்க வங்கியில் கடன் பெற்று கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் கடன் தொகை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே இதில் கலெக்டர் தலையீட்டு வங்கிகளிடம் இருந்து கடன் தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 280 மனுக்கள்
வேப்பந்தட்டை தாலுகா, பழைய மரவநத்தம் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வடக்கே கன்வாய்க்கால் பாலம் உள்ளது. இதனால் கன்வாய்க்காலில் தான் கழிவுநீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அந்த பாலத்தில் வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மண்ணை கொட்டி விட்டு மூடி விட்டார். இதனால் கழிவுநீர் எங்கள் தெருவில் தேங்குகிறது. தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோயும் பரவி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே அந்த கன்வாய்க்காலில் தொடர்ந்து கழிவுநீர் செல்வதற்கும், பாலத்தில் மண்ணை கொட்டி நிரப்பியவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 280 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சாலை வசதி
குன்னம் தாலுகா, எழுமூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமையில், அக்கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எழுமூர்-பீல்வாடி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை வசதி சரியாக இல்லை. மழைக்காலங்களில் அந்தப்பகுதியில் தண்ணீர் தேங்கி சேறு, சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே அந்தப்பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும்
இதே போல் எழுமூர்-முருக்கன்குடி சாலையில் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடிய 10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் அஸ்திவார மண்ணை ஆற்றின் நடுவே கரையாக அமைத்து விட்டனர். இதனை ஆற்றின் இருபுறமும் கரையாக அமைக்க வேண்டும். ஏனெனில் எழுமூர் பெரிய ஏரியின் உபரி நீர் இவ்வாற்றின் வழியே தான் செல்லும். ஆற்றின் நடுவே அமைக்கப்பட்ட கரையை எடுக்கப்படாவிட்டால் 100 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி நின்று நெற்பயிர்கள் பாதிக்கப்படும். எனவே ஆற்றின் இருபுறமும் உள்ள கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.