பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுக்களை பெறக்கூடாது - அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
|நாளை மறுநாள் முதல் பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். இந்த சூழலில் இன்னும் ஐந்து நாட்களில் ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிகிறது.
இந்நிலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பயணிகளிடம் இருந்து நாளை மறுநாள் (28-ஆம் தேதி) முதல் வாங்கக்கூடாது என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.