காஞ்சிபுரம்
குறித்த நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் போராட்டம்
|குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இருந்து காலையில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிகம். அதே போல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி செங்கல்பட்டு மற்றும் சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிகம் பேர் பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக உத்திரமேரூர் பணிமனையில் இருந்து பஸ்கள் குறித்த நேரத்தில் இயங்காமல் தாமதமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
போளூர் மற்றும் வந்தவாசி பகுதியில் இருந்து வரும் பஸ்களில் பொதுவாக கூட்டம் அதிகம் இருப்பதால் உத்திரமேரூரில் இருந்து செல்லக்கூடியவர்கள் அதில் ஏறி செல்ல முடியவில்லை. அதனால் இவர்கள் உத்திரமேரூர் டெப்போவில் இருந்து இயக்கும் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.
இதேபோல் நேற்று காலையும் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் கோபமடைந்த பொதுமக்கள் திடீரென உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே பஜார் வீதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்தரமேரூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேசி பஸ்களை தாமதமின்றி இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.