திருச்சி
ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம்
|பராமரிப்பு பணிகளால் ரெயில்கள் தாமதமானதால் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம் நடத்தினர்.
பராமரிப்பு பணிகளால் ரெயில்கள் தாமதமானதால் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம் நடத்தினர்.
பராமரிப்பு பணிகள்
திருச்சி ரெயில்வே கோட்டத்தில், ஆங்காங்கே தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில்கள் முழுவதுமாகவும், சில ரெயில்கள் பகுதி வாரியாக இயக்கப்பட்டும், சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளது.
சில ரெயில்கள் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் நின்று தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனவும் ரெயில்வே துறை சார்பில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் விரைவு ரெயில் நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணியளவில் திருச்சி திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சுமார் அரை மணி நேரம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
முற்றுகை
ஆனால் குறிப்பிட்ட படி ரெயில் அரை மணி நேரம் கழித்துப் புறப்படவில்லை. இந்த ரெயிலுக்கு பின்னர் வந்த குருவாயூர், சோழன் உள்ளிட்ட ரெயில்களும் இதேபோல நிறுத்தப்பட்டன. திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் காத்திருந்த, செங்கோட்டை ரெயில் பயணிகள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புறப்படாததால் ஆத்திரம் அடைந்து திருவெறும்பூர் ரெயில்நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்குப் பின்னர் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.