மின்சார ரெயிலில் இருந்து திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் பீதி
|ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கி நடைமேடைக்கு அலறி அடித்து ஓடினார்கள்.
பேரம்பாக்கம்,
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து நேற்று காலை சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என திரளான பயணிகள் இருந்தனர்.
மின்சார ரெயில் கடம்பத்தூர்-செஞ்சி பானம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 8.30 மணி அளவில் வந்தபோது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வந்தது.
ஓடும் ரெயிலில் திடீரென கரும்புகை வந்ததால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர். இதையடுத்து ரெயில் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கி நடைமேடைக்கு அலறி அடித்து ஓடினார்கள்.
பின்னர் புகை ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த ரெயில்வே ஊழியர்கள் அந்த புகையானது ரெயில் சக்கரம் பகுதியில் இருந்து வந்ததை கண்டு பிடித்தனர். பிரேக் பிடிக்கும்போது சக்கரம் இயங்காமல் நின்று அந்த பகுதியில் இருந்து புகை வந்தது தெரிய வந்தது. பழுது சரி செய்யப்பட்ட பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து ரெயில் மெதுவான வேகத்துடன் சென்னை கடற்கரை நோக்கி சென்றது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக உள்ளே மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அனைத்தும் இயக்காமல் ரெயில் புறப்பட்டு சென்றது.