< Back
மாநில செய்திகள்
மழைநீர் ஒழுகியதால் ஓடும் பஸ்சில் குடைபிடித்து சென்ற பயணிகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மழைநீர் ஒழுகியதால் ஓடும் பஸ்சில் குடைபிடித்து சென்ற பயணிகள்

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே மழைநீர் ஒழுகியதால் ஓடும் பஸ்சில் பயணிகள் குடைபிடித்தபடி பயணித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

உளுந்தூர்பேட்டை

பருவமழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது.

இந்த நிலையில் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து வில்லிவலம் கிராமம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர்.

பஸ்சில் குடைபிடித்தனர்

பஸ் குறிப்பிட்ட தூரம் சென்றதும் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மழைநீர் உள்ளே வராமல் இருக்க பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகளை அவசர அவசரமாக மூடினர். பின்னர் மழையின் வேகமும் படிப்படியாக அதிகரித்தது. அப்போது பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டை இருந்ததால் அதன் வழியாக உள்ளே ஒழுகிய மழைநீர் பயணிகள் மீது விழுந்தது.

இதையடுத்து இருக்கைகளில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக எழுந்து மழைநீர் ஒழுகாத இடத்தில் போய் நின்றனர். சிலர் தங்கள் கையில் இருந்த குடைகளை விரித்து பிடித்தபடியே பயணித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்