தஞ்சாவூர்
பயணிகள் கடும் அவதி
|தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
தஞ்சை ரெயில் நிலையம்
தஞ்சையில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, சரஸ்வதி மகால் நூலகம் போன்ற வரலாற்று சிறப்பு பெற்றவைகளும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களும் அமைந்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமானோர் நாள்தோறும் தஞ்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெயில் போக்குவரத்து மூலமே தஞ்சைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்காரணமாக தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
ரெயில் மூலம் வரும் பயணிகளை அழைத்து செல்வதற்காக பல்வேறு வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை, வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தில் நிறுத்தாமல் ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள பகுதியில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இது தவிர பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் ஆட்டோக்கள், கார்கள் என பல்வேறு வாகனங்களும் ரெயில் நிலையத்தின் முன்பு ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியை அடைத்தபடி தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
பயணிகள் கடும் அவதி
குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் முன்பு உள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நிற்கின்றன. இவ்வாறு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் ரெயில் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவசர, அவசரமாக ரெயிலை பிடிப்பதற்காக வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து வரும் பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் சென்று தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலை பிடிக்க முடியாமல் ரெயிலை தவற விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இவ்வாறான வாகனங்களால் அந்த பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வரும், பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி ரெயில் நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.